பாலியல் தொழிலாளிகளை கண்ணியத்துடன் நடத்துங்கள் - உச்சநீதிமன்றம்!

பாலியல் தொழிலாளிகளை கண்ணியத்துடன் நடத்துவதோடு மனரீதியாகவோ உடல் ரீதியாகவோ துன்புறுத்தக்கூடாது என அனைத்து மாநில காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பாலியல் தொழிலாளிகளை கண்ணியத்துடன் நடத்துங்கள் - உச்சநீதிமன்றம்!

கொரோனா காலத்தில் பாலியல் தொழிலாளர்கள் எதிர்கொண்ட பிரச்னைகள் தொடர்பான மனு, பி.ஆர்.கவாய், எல் நாகேஸ்வர ராவ், மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது பாலியல் தொழிலாளர்களிடம் காவல்துறையின் அணுகுமுறை சில நேரங்களில் மிருகத்தனமாக உள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், அவர்கள் மீது வன்முறையை பிரயோகித்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த கட்டாயப்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்தனர். கண்ணியத்துடன் நடத்துவதோடு துன்புறுத்தக்கூடாது எனக்கூறி காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான எந்தவொரு பாலியல் தொழிலாளிக்கும் உடனடியாக சட்டப்பூர்வ மற்றும் மருத்துவ உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டனர்.

பாலியல் தொழிலாளிகள் குறிப்பிட்ட இடங்களில் இருந்து மீட்கப்படும் போது, அவர்தம் பெயர் மற்றும் அடையாளங்களை ஊடகத்தினர் வெளியிடாமல் இருக்க அறிவுறுத்துமாறு இந்திய பிரஸ் கவுன்சிலை நீதிமன்றம் வலியுறுத்தியது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பாலியல் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் வாழ அனைத்து தகுதியையும் பெற்றவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.