ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 32 செம்மரகட்டைகள் பறிமுதல்- 3 பேர் கைது

திருப்பதி அருகே ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரகட்டைகளை கடத்த முயன்ற 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான  32 செம்மரகட்டைகள் பறிமுதல்- 3 பேர் கைது

திருப்பதியில் உள்ள செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நேற்று இரவு நேரம் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.  அப்போது திருப்பதியை அடுத்த ஹரிதா காலனி, கரங்கம்பாடி போன்ற இடங்களில் செம்மரம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து  செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் 3 தனிப்படை அமைத்து சம்பவ இடத்திற்கு சென்றனர். 

அதில் மூன்று இடங்களிலிருந்து  32 செம்மரக்கட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதனைதொடர்ந்து செம்மரங்களை சுமந்து சென்ற 10 க்கும் மேற்ப்பட்டோரை போலீசார் பிடிக்க முயன்றனர்.

அதில் 3 பேர் மட்டுமே பிடிபட்ட நிலையில் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்க்கொண்டனர். அதில் ஒருவர் சிறுவன் என்பது தெரியவந்தது. இதனை அடுத்து இருவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்க உள்ளனர்.

மேலும் இது குறித்து பேசிய செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ் பி, ஒரு கோடி மதிப்பிலான முப்பத்தி இரண்டு செம்மரக்கட்டைகள் பிடித்திருப்பதாகவும் தப்பித்து ஓடியவர்களை இரண்டு தனிப்படை அமைத்து தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.