பஞ்சாபின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு....

பஞ்சாப் முதலமைச்சர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்த நிலையில், புதிய முதலமைச்சராக பட்டியலினத்தை சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார்  

பஞ்சாபின் புதிய முதலமைச்சராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வு....

உட்கட்சி பூசல் காரணமாக பஞ்சாப் முதலமைச்சர் பதவியை அமரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். இதனையடுத்து சண்டிகரில் நேற்று நடைபெற்ற அக்கட்சி எம். எல்.ஏக்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 புதிய முதலமைச்சராக நவ்ஜோத் சிங்கின் ஆதரவு பெற்ற சுனில் ஜாகர், பிரதாப் சிங் பஜ்வா மற்றும் பீண்ட் சிங் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியான நிலையில்  புதிய முதலமைச்சராக முன்னாள் அமைச்சர் சுக்ஜிந்தர் ரந்தவாவை நியமிக்க காங்கிரஸ் தலைமை முடிவு  செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவின. 

இந்நிலையில் புதிய திருப்பமாக அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பட்டியலினத்தை சார்ந்த சரண்ஜித் சிங் சன்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சண்டிகரில் நடைபெற்ற எம். எல்.ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக அக்கட்சி மேலிடப் பொறுப்பாளர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார். 

51 வயதே  நிரம்பிய சரண்ஜித் சிங் சன்னி அமரீந்தர் சிங் அமைச்சரவையில் தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழில் பயிற்சித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். சம்கவுர் சாகிப் தொகுதியிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சரண்ஜித் சிங் சன்னி பஞ்சாப் மாநிலத்தின் முதல் பட்டியலின முதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.