கர்நாடகாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீட்டிப்பு...இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கர்நாடகாவில் கன மழை பெய்து வருவதால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், தற்போது, 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் நீட்டிப்பு...இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கடலோர மாவட்டங்கள் மற்றும் வட கர்நாடகாவின் சில பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. அதனால் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, 13 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி வெள்ளம் பாதித்த பகுதிகளில், மீட்பு பணிக்கு தயாராக இருக்கும் படி அறிவுறுத்தினார்.

இந்நிலையில், நேற்று பெய்த கன மழையால், மக்கள் வெள்ளம், நிலச்சரிவு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்வதால், கர்நாடகாவின் தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, சிக்கமகளூர், ஷிவமொக்கா, குடகு மற்றும் ஹாசன் என 7 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும் இன்று முதல் 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவல் படி, கர்நாடகாவில், ஜூலை மாதத்தில் 94% அதிக மழை பெய்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பசவராஜ் பொம்மை,  மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  17 தாலுகாக்கள் மற்றும் 37 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிப்பதாகவும் கூறினார். மேலும், ஜூன் 1 முதல், தற்போது (வெள்ளிக்கிழமை) வரை 12 பேர் மற்றும் 64 கால்நடைகள் மழையால் உயிரிழந்துள்ளதாகவும் கூறினார்.