ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் ராகுல் பத்திரமாக மீட்பு !!

சத்தீஷ்கரில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்ட 10 வயது சிறுவன், 104 மணி நேர போராட்டத்திற்குப்பின் மீட்பு குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டான்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் ராகுல் பத்திரமாக மீட்பு !!

சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிர் சம்பா மாவட்டத்தின் பிக்ரித் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ராகுல், கடந்த வெள்ளிக் கிழமை 80 அடி ஆழ ஆழ்துளை கிணறு ஒன்றில் தவறி விழுந்தான். தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறை, காவல்துறை, ராணுவம், தேசிய பேரிடர் மீட்புக்குழு மற்றும் மருத்துவக் குழு என 500க்கும் மேற்பட்டோர் 60 அடி ஆழத்தில் சிக்கியிருந்த சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆழ்துளை கிணற்றில் பைப் மூலமாக ஆக்ஸிஜனை செலுத்தி சிறுவனின் உடல்நிலையை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், 104 மணி நேர போராட்டத்திற்குப் பின் சிறுவனை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

இதனையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் சிறுவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிறுவன் ராகுலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சந்தாஷமான செய்தியை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல், அனைவரின் பிரார்த்தனையாலும், மீட்புக் குழுவினரின் இடைவிடாத அர்ப்பணிப்பு முயற்சியாலும், ராகுல் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் சிறுவன் விரைவில் பூரண குணமடைய வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மீட்புக்குழுவில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகளையும் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் கூறியுள்ளார்.