”சர்தார் வல்லபாய் படேலுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்” - பிரதமர் மோடி

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளை முன்னிட்டு, குஜராத்தில் உள்ள பிரமாண்டமான படேல் உருவச்சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் நரேந்திர மோடி, தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழி ஏற்றுக் கொண்டார். 

இன்று இந்தியாவை ஒருங்கிணைந்த சர்தார் வல்லபாய் படேலின் 148 ஆவது பிறந்த நாள் தேசிய ஒற்றுமை நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு முறைப் பயணமாக குஜராத் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, ஏக்தா நகரில் அமைந்துள்ள வல்லபாய் படேல்  சிலைக்கு மரியாதை செலுத்தினார்.  

தொடர்ந்து அங்குள்ள மைதானத்தில் நடைபெற்ற வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து தேசிய ஒற்றுமை நாள் உறுதி மொழியை வாசித்து அங்கிருந்தவர்கள் ஏற்கச் செய்தார்.

பின்னர் மத்திய துணை ராணுவப் படை வீராங்கனைகளின் சாகச நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார். இதனிடையே பிரதமர் மோடி, தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில், சர்தார் படேலின் அசைக்க முடியாத சக்தி, தொலைநோக்குப் அரசியல், அசாதாரண அர்ப்பணிப்புடன் நாட்டை வடிவமைத்ததை நினைவு கூர்வதாக கூறியுள்ளார். நாட்டை ஒருங்கிணைக்க அவர் மேற்கொண்ட ஈடுபாடு நம்மை வழிநடத்துவதாகவும் அவருக்கு நாடு என்றென்றும் கடமைப்பட்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.