மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் பாஜக நாட்டை விட்டு அகற்றப்பட வேண்டும் : மம்தா பானர்ஜி ஆவேசம்..

மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் பாஜக நாட்டை விட்டு அகற்றப்பட வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி  கூறியுள்ளார். 

மக்களின் சுதந்திரத்தை பறிக்கும் பாஜக நாட்டை விட்டு அகற்றப்பட வேண்டும் : மம்தா பானர்ஜி ஆவேசம்..
2024 நாடாளுமன்றத் தேர்தலில்  பாஜகவை வீழத்தும் முனைப்பில்  எதிர்க்கட்சிகள் ஆலோசித்து  வருகின்றன. மேற்கு  வங்கத்தில்  அபார வெற்றி  பெற்று  ஆட்சியை தக்க வைத்து கொண்ட மம்தா பானர்ஜி, அடுத்து பிரதமர் பதவிக்கும் காய் நகர்த்தி வருகிறார்.  
 
இந்த நிலையில் மேற்கு  வங்கத்தில்  வீரர்களின் நினைவு தினத்தையொட்டி, காணொலி  வாயிலாக  குஜராத் திரிபுரா, அசாம், ஒடிசா, பீகார், பஞ்சாப், உள்ளிட்ட மாநில மக்களிடம் மம்தா பானர்ஜி உரை நிகழ்த்தினார். 
அப்போது உத்தரபிரதேசத்தை சிறந்த மாநிலம் என பிரதமர் மோடி கூறியது  மிகப்பெரிய அவமானம் என்று  சாடினார். கங்கை  நதியில்  சடலங்கள் மிதந்த உபியை  சிறந்த மாநிலம் என மத்திய அரசு அறிவித்தது வெட்ககேடானது என்றும் ஆவேசம் தெரிவித்தார்.
 
மேலும் பெகாசஸ் விவகாரம் குறித்து  மத்திய அரசை சரமாரியாக விளாசினார் மம்தா பானர்ஜி. தனது செல்போன்  உட்பட நீதிபதிகளின் பேச்சும் ஒட்டுக்கேட்கப்படுவதாக குற்றம்சாட்டிய மம்தா, எதிர்கட்சி தலைவர்கள் சமூக செயற்பாட்டாளர்களின் போன்களை டேப் செய்வதில் மட்டுமே மோடி அரசு நேரத்தை செலவிடுவதாகவும் மக்கள் பிரச்சனைகள் குறித்து அக்கரை கொள்ளவில்லை என்றும் மமதா பானர்ஜி விமர்சித்தார்.
 
 ஒட்டுகேட்பு  விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும் என மமதா பானர்ஜி கேட்டுக் கொண்டார்.மக்களின் சுதந்திரத்தில் தலையிடும் பாஜக இந்தியாவிலிருந்து அகற்றப்பட வேண்டும் என ஆவேசம் தெரிவித்த மம்தா, பெசாகஸ் விவகாரத்தில் எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.