கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் :  மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் !!

தொற்று பரவலை தடுக்க கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்குமாறு மாநிலங்களுக்கு யோசனை தெரிவித்து மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் :  மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் !!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தடுப்பதில் பரிசோதனைகள் முக்கிய இடம் வகிக்கின்றன. இதனால் தொற்று பாதிப்பு விரைவாக கண்டுபிடிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்படுகின்றனர். ஆனால் சில மாநிலங்களில் கொரோனா பரிசோதனை அளவு குறைந்துள்ளதாக மத்திய அரசுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து மாநிலங்கள் கொரோனா மாதிரிகள் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக மாநிலங்களுக்கு யோசனைகள் கூறி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில், குறிப்பிட்ட பகுதிகளில் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் போக்கை கருத்தில் கொண்டு பரிசோதனைகளை அதிகரிக்க உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு எதிராக பரிசோதனைகள் முக்கிய அங்கமாக உள்ளன. ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தளத்தை பார்கும்போது பல மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் மாதிரிகள் பரிசோதனை குறைந்துள்ளது தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், அதிக ஆபத்தில் உள்ளவர்கள், அதிக பாதிப்புக்குள்ளாகும் நபர்களின் சோதனைகள் மூலம் நோய் தீவிரமான வகைக்கு முன்னேறுவதை தவிர்க்கலாம் என்றும், தொற்று நோய் பரவுவதை திறம்பட கண்காணிப்பதையும் உறுதிசெய்வதற்கு சோதனையை அதிகரிப்பது அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கடமை ஆகும் என்றும் தெரிவித்துள்ளது.