மறைந்த பழம் பெரும் பாலிவுட் நடிகர்  திலீப் குமாருக்கு தலைவர்கள் இரங்கல்...

மறைந்த பழம் பெரும் பாலிவுட் நடிகர்  திலீப் குமாருக்கு குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மறைந்த பழம் பெரும் பாலிவுட் நடிகர்  திலீப் குமாருக்கு தலைவர்கள் இரங்கல்...

பழம் பெரும் பாலிவுட் நடிகர்  திலீப் குமார் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். திலீப் குமாரின் மறைவு பாலிவுட் திரையுலகினர் மட்டுமின்றி அனைத்து துறையினரிடையேயும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில்  திலீப் குமாரில் மறைவுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் வளர்ந்து வரும் இந்தியாவின் வரலாற்றை சுருக்கமாக கூறியவர்  திலீப் குமார் என்றும் அவரது மறைவால் ஒரு சகாப்தம் முடிந்து விட்டது என்றும் கூறியுள்ளார். மேலும் திலீப் இந்திய  மக்களின் இதயத்தில் என்றென்றும் வாழ்வார் என்றும் அவரை பிரிந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல்  செய்தியில், சினிமாவின் புராணக்கதை என்று நினைவு கூரப்படுபவர்  திலீப் குமார் என புகழாரம் சூட்டியுள்ளார். அவர் இணையற்ற புத்திசாலித்தனத்தால் ஆசீர்வதிக்கப்பட்டார் என்றும் இதன் காரணமாக தலைமுறைகளை தாண்டி அனைவராலும் அவர் ஈர்க்கப்பட்டவர் என்றும் கூறியுள்ளார்.  திலீப் குமார் காலமானது நமது கலாச்சார உலகிற்கு ஒரு இழப்பு என்றும் பிரதமர் கூறியுள்ளார். 

இதேபோல் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,  திலீப் குமாரின் இழப்பு பாலிவுட்டில் ஒரு அத்தியாயத்தின் முடிவு என்றும் அவரது அற்புதமான நடிப்பு கலை உலகில் ஒரு பல்கலைக்கழகம் என புகழாரம் சூட்டினார். 

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்திய சினிமாவில் மிகவும் மதிக்கதக்க நபர் என்றும் சினிமா துறையில்  திலீப் குமாரின் பங்களிப்பு விலைமதிப்பற்றது  எனவும் கூறியுள்ளார்.