பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பெயர் பரிந்துரை - பிரதமர் இம்ரான் கான் !

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக, அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குல்சார் அகமது பெயரை இம்ரான் கான் பரிந்துரைத்துள்ளார். 

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பெயர் பரிந்துரை - பிரதமர் இம்ரான் கான் !

பாகிஸ்தானில் ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலை அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி, எதிர்கட்சிகள் பிரதமர் இம்ரான் கானை பதவி விலக வலியுறுத்தி வந்தனர். மேலும் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானமும் கொண்டு வரப்பட்டது.

இதுதொடர்பான வாக்கெடுப்பு கடந்த ஞாயிற்று கிழமை நடைபெறவிருந்த நிலையில், பிரதமர் பதவி நீக்கத்தில் வௌிநாட்டு சதி இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, அரசியல் சாசன பிரிவு 5ஐ சுட்டிக்காட்டி துணை சபாநாயகர், பிரதமருக்கு எதிரான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து செய்தார்.

அதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைத்த அதிபர் ஆரிப் அலி, 3 மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என தெரிவித்தார். இதுதொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்ற விசாரணையில் மீண்டும் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இடைக்கால பிரதமராக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி குல்சார் அகமது பெயரை பிரதமர் இம்ரான் கான் பரிந்துரைத்துள்ளார். குல்சார் அகமது பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் 27வது தலைமை நீதிபதியாக கடந்த 2019 டிசம்பர் முதல் 2022 பிப்ரவரி மாதம் வரை பதவி வகித்தவர். பனாமா பேப்பர்ஸ் வழக்கில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு தொடர்பு இருப்பது அறிந்ததும், அவரை தகுதி நீக்கம் செய்த 5 நீதிபதிகளில் ஒருவராக இருந்தவர். அதுமட்டுமல்லாது அரசு மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக விமர்சன கருத்துக்களை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியவர். 

மேலும் வடமேற்கு பாகிஸ்தானில் இருந்த இந்து கோயில் மர்ம கும்பலால் சேதப்படுத்திய வழக்கை விசாரித்த அவர், அதனை மீண்டும் புதுப்பிக்க உத்தரவிட்டதோடு, அதற்கு தேவையான பணத்தை அந்த கும்பலிடமே வசூலிக்கவும் உத்தரவிட்டிருந்தார்.