நாட்டின் ஆட்சி மொழியே அலுவல் மொழியாக இருக்க வேண்டும்... இனி ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை பேச வேண்டும் - அமித் ஷா!

நாடு முழுவதும் பல்வேறு தரப்பு மக்களாலும் பேசப்படும் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

நாட்டின் ஆட்சி மொழியே அலுவல் மொழியாக இருக்க வேண்டும்... இனி ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை பேச வேண்டும் - அமித் ஷா!

டெல்லியில் நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் 37வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய மத்திய அமைச்சர் அமித் ஷா, நாட்டின் ஆட்சி மொழியே அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டார். இதற்காகவே மத்திய அமைச்சரவையின் 70 சதவீத நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்படுவதாகவும் கூறினார்.  

வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, ​​அது இந்தியாவின் மொழியாக இருக்க  வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர்,  உள்ளூர் மொழிக்கு மாற்றாக இல்லாமல் ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி இருக்க வேண்டும் என விளக்கினார்.  

அதுமட்டுமல்லாது தற்போது அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்காக 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி மொழியின் தொடக்க அறிவைக் கொடுக்க வேண்டியது அவசியம் எனவும், இந்தி தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் அமித் ஷா தெரிவித்தார்.