சீனாவில் ஆயிரம் ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வெளுத்து வாங்கிய கனமழை...

சீனாவின் மத்திய மாகாணமான ஹெனானில், ஆயிரம் ஆண்டுகள் இல்லாத அளவாக கனமழை வெளுத்து வாங்குவதால், நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. 

சீனாவில் ஆயிரம் ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வெளுத்து வாங்கிய கனமழை...
ஹெனானில் கடந்த வாரம் முதல், தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்து ஹெனான் மாகாணம் கடல் போல் காட்சி அளிக்கிறது. சாலை மற்றும் வீதிகளில் ஆறு போல் தண்ணீர் பாய்ந்தோடுகிறது. சாலைகள், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால், மாகாணத்தின் தலைநகர் ஷெங்க்சோ உள்ளிட்ட 12க்கு மேற்பட்ட நகரங்கள் தீவு போல் காட்சியளிக்கின்றன. 

மேலும் அங்குள்ள மஞ்சளாறு உள்ளிட்ட நதிகளில் அபாயக்கட்டத்தை கடந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது வரை அங்கு பெருவெள்ளத்தில் சிக்கி 12 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கரையோரம் வசித்து வந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 
இதனிடையே அத்தியாவசிய பணிகளுக்காக ரயில்களை பயன்படுத்தி வரும் மக்கள், ரயிலுக்குள் தேங்கி இருக்கும் மார்பளவு வெள்ளத்தில் பயணிக்க நேர்ந்த வீடியோ வெளியாகியுள்ளது.சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத சூழல் நிலகிறது. தண்ணீர் சூழ்ந்திருப்பதால் பழுதான வாகனங்களை, உரிமையாளர்கள் நீரில் தள்ளிச் செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது.தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளதோடு, அந்த மாகாணத்தில் விமான சேவையும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.