கனமழையால் கங்கை மற்றும் யமுனையில் கடும் வெள்ளப்பெருக்கு...

வட மாநிலங்களில், தொடர் மழையின் காரணமாக கங்கை மற்றும் யமுனையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கனமழையால் கங்கை மற்றும் யமுனையில் கடும் வெள்ளப்பெருக்கு...
உத்திரபிரதேசம், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வெள்ளம்  ஊருக்குள் புகுந்துள்ளது. கங்கை மற்றும் யமுனை நதியில் நீர்மட்டம் அதிகரித்து ஆபாய கட்டத்தை எட்டியுள்ளது. வெள்ளம் காரணமாக உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரின் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல் படே அனுமன் கோவிலுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பு படையினர் படகு மூலம் சென்று மீட்டு வருகின்றனர்.
 
இதேபோல் பீகாரில் தொடர் மழையின் காரணமாக கங்கை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து அபாய கட்டத்தை எட்டியுள்ளது. பாட்னாவின் கிருஷ்ணா காட் பகுதியில் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்துள்ளதால் மக்கள் முழங்கால் அளவு நீரில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்திலும் தொடர்ந்து பெய்யும் கனமழையால் ஆங்காங்கே வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பாரன் என்னும் பகுதில் வெள்ள நீர் சாலையில் தேங்கி நிற்பதால் மக்கள் வாகனங்களை கூட இயக்க முடியாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.