மத்திய அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை  11 சதவீதம் உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 11% அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

கொரோனா தொற்று பரவல் காரணமாக அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், 3 தவணை அகவிலைப்படி உயர்வையும் மொத்தமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில்  நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 11 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய அரசு ஊழியர்களுக்கு 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த அறிவிப்பு ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும் எனவும் தெரிவித்தார். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர் என அனுராக் தாகூர்  தெரிவித்தார்.

அதேபோல் பொது சுகாதாரத்தை வலுப்படுத்த இந்தியா - டென்மார்க் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் நிலக்கரியை கையாளுவதில் இந்திய எஃகு அமைச்சகம் மற்றும் ரஷ்ய நாட்டின் எரிசக்தி அமைச்சகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரசை அனுமதி அளித்துள்ளது.