10% இட ஒதுக்கீடு - உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்...

பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்ற அனுமதி தேவை என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

10% இட ஒதுக்கீடு - உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்...

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றாத மத்திய அரசுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த சமயத்திலேயே, 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. 

இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு வழங்கப்படும் 10 சதவீத இட ஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தின் 50 இட ஒதுக்கீடு வரம்புக்கு அதிகமாக இருப்பதாகத் தெரிவித்து அந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தினார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 10 சதவீத இட ஒதுக்கீட்டை  அமல்படுத்துவதற்கு உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என உத்தரவிட்டது.  சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது. 

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது. மேலும் 27 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக போடப்பட்ட வழக்கில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதை சுட்டிக் காட்டிய உச்சநீதிமன்றம், இது வரம்பு மீறிய செயல் எனவும் குறிப்பிட்டுள்ளது.