கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக அறிவித்தது மத்திய அரசு…

கருப்பு பூஞ்சை நோயை பெருந்தொற்றாக அறிவித்தது மத்திய அரசு…

கொரோனா நோயாளிகளை தாக்கும் கருப்பு பூஞ்சை நோயை மத்திய அரசு பெருந்தொற்றாக அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிதீவிரமடைந்துள்ள நிலையில், புது பிரச்னையாக உருவெடுத்துள்ளது கருப்பு பூஞ்சை நோய். கொரோனா நோயாளிகளை குறிவைத்து தாக்கும் இந்த நோய், அதிகளவில் மருந்துகள் எடுப்பதாலும், சர்க்கரை நோய் உள்ள கொரோனா நோயாளிகளுக்கும் எளிதில் பரவுவதாக மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதையடுத்து, இந்த நோயை அனைத்து மாநிலங்களும் பெருந்தொற்றாக கருதி தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் என அனைவரும் இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி இ என் டி மருத்துவர்கள் கண் மருத்துவர்கள் பொது மருத்துவர்கள் நரம்பியல் மருத்துவர்கள் உள்ளிட்டோரை இந்த வைரஸ் பரவல் கட்டுப்படுத்தும் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்றும், Amphotericin B மருந்தினை பயன்படுத்தலாம் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கருப்பு பூஞ்சை நோய் அறிகுறி உள்ளவர்களை உடனடியாக கண்டறிந்து மத்திய சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.