மக்களுக்கு தொலைத் தொடர்புத் துறை வழங்கிய பரிசு...நரேந்திர மோடி பெருமிதம்!

மக்களுக்கு தொலைத் தொடர்புத் துறை வழங்கிய பரிசு...நரேந்திர மோடி பெருமிதம்!

இந்திய ஒன்றிய அரசின் தொலைத் தொடர்புத் துறை  5ஜி அலைக்கற்றையை அண்மையில் ஏலம் விட்டது. இதில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள அலைக்கற்றைகளை  ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா நிறுவனங்கள் ஏலம் எடுத்தன. 

தீபாவளிக்குப் பின் அறிமுகம்

இதையடுத்து இந்தியாவில் 5ஜி சேவையை தீபாவளிக்கு பிறகு அறிமுகப்படுத்தவுள்ளதாக  ரிலையன்ஸ் ஜியோ நிறுவனர் அம்பானி தெரிவித்தார். இந்தநிலையில், டெல்லி பிரகதி மைதானத்தில் 6 ஆவது இந்திய மொபைல் காங்கிரஸ் கண்காட்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, நிகழ்ச்சியில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் ஒவ்வொரு கட்டமாக மாநகரங்களில் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்ல வழி வகுக்குமா?

நிகழ்ச்சியை தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, இது வரலாற்று சிறப்புமிக்க நாள் எனவும், இந்தியாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல 5ஜி வழிவகுக்கும் என்றும் கூறினார். 130 கோடி மக்களுக்கும் இதனை தொலைத்தொடர்பு துறை பரிசாக வழங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டார். 5ஜி சேவை மூலம் இந்தியர்களின் வளர்ச்சி வாய்ப்பு அதிகரிக்கும் எனவும்  நம்பிக்கை தெரிவித்தார். டிஜிட்டல் இந்திய திட்டம் ஒவ்வொரு குடிமகன்களையும் இணைத்துள்ளதாக கூறிய மோடி, இடைத்தரகர்களின் இடையூறின்றி அரசின் சாதனைகள் சென்றடைய இது உறுதுணையாக இருக்கும் என அவர் தெரிவித்தார். 

ஒரு ஜிபி 10 ரூபாய்!

தொடர்ந்து பேசிய மோடி, இந்தியாவில் ஒரு ஜிபி டேடா 300 ரூபாயாக இருந்த நிலை மாறி தற்போது 10 ரூபாயாக குறைந்திருப்பதாகவும், சராசரியாக ஒரு மாதத்திற்கு மக்கள் 14 ஜிபி வரை பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.  ஏழை எளிய மக்கள் கூட புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவித்தார். இதேபோல் செல்போன்களின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளதாக மோடி பெருமிதம் தெரிவித்தார். முன்னதாக நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த 5ஜி தொலை தொடர்பு உபகரணங்களை பார்வையிட்ட மோடி, அதுபற்றிய விவரங்களையும், அதன் பயன்பாட்டையும் கேட்டறிந்தார்.