ஷிண்டே தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரிக்க வாய்ப்பு!

ஏக்நாத் ஷிண்டே தாம் தான் சிவசேனா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக நீடிப்பதாக தன்னை ஆதரிக்கும் 37 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு அனுப்பியுள்ளார்.

ஷிண்டே தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரிக்க வாய்ப்பு!

மகாராஷ்டிராவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து அங்கு எந்நேரமும் ஆட்சி கவிழலாம் என்னும் சூழல் நிலவுகிறது.

மகாரஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய “மகாரஷ்டிரா வளர்ச்சி முன்னணி”யின் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக உள்ளார்.

சிவசேனா கட்சி தனது கொள்கைக்கு விரோதமானவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளதாகக் கூறி அக்கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே அக்கட்சியின் தலைமைக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கியுள்ளார். தாம் சிவசேனவிலிருந்து விலகப்போவதில்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸுடனான் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் எனக் கூறி வருகிறார்.

ஆளுநருக்கு கடிதம்

ஏக்நாத் ஷிண்டே தாம் தான் சிவசேனா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக நீடிப்பதாக தன்னை ஆதரிக்கும் 37 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை ஆளுநர்  பகத் சிங் கோஷ்யாரிக்கு அனுப்பியுள்ளார். அக்கடிதத்தின் நகலை சட்டப்பேரவையின் துணை சபாநாயகருக்கும், சட்டப்பேரவை செயலாளருக்கும் அனுப்பியுள்ளார் ஷிண்டே.

தற்போது ஏக்நாத் ஷிண்டேவுக்கு சிவசேனா கட்சியின் 37 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவும் 9 சுயேட்சை உறுப்பினர்களின் ஆதரவும் உள்ளது. இவர்கள் அனைவரும் பாஜக ஆட்சி நடைபெறும் அசாம் மாநிலத்தின் தலைநகர் குவஹாத்தியில் தங்கியுள்ளனர்.

12 உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய கோரிக்கை

சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாத காரணத்தால் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 12 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக்க்கோரி சட்டப் பேரவை துணை சபாநாயகருக்கு உத்தவ் தாக்கரே கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே சிவசேனா கட்சியை உடைக்க நடக்க்கும் பாஜகவின் சூழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெயந்த் பாட்டில் தாம் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை ஆதரிப்பதில் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.

- ஜோஸ்