அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

அறிவிக்கப்படாத மின்வெட்டைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!

புதுச்சேரி நெல்லித்தோப்பு பெரியார் நகர் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வந்துள்ளது.

தரமான குடிநீர் இல்லை

அதேபோல் அப்பகுதி மக்களுக்கு தரமான குடிநீர் இல்லை எனவும் கூறப்படுகிறது, இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அப்பகுதியை சேர்ந்தவர்கள் பலமுறை புகார்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இந்த நிலையில் பெரியார் நகர் பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நெல்லித்தோப்பு சந்திப்பில் இரவு திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு வந்த உருளையன்பேட்டை காவல் நிலைய போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரின் சமாதானத்தை ஏற்க மறுத்தனர்.  

இதனிடையே மழை பெய்த நிலையில் பொதுமக்கள் கொட்டும் மழையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றனர். பொதுமக்களின் இந்த போராட்டம் காரணமாக நெல்லித்தோப்பு சந்திப்பில் கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.