வங்கி மோசடி செய்த வைர வியாபாரிகள்.. . ஆன்டிகுவா தப்பிச்சென்ற நீரவ்வின் உறவினர் மெகுல் சோக்சி மாயம்... வழக்கறிஞர் புகார்!!

வங்கி மோசடி செய்த வைர வியாபாரிகள்.. .  ஆன்டிகுவா தப்பிச்சென்ற நீரவ்வின் உறவினர் மெகுல் சோக்சி மாயம்... வழக்கறிஞர் புகார்!!

பிஎன்பி வங்கியில் 14 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு ஆன்டிகுவாவில் தலைமறைவாக உள்ள மெகுல் சோக்‌சியை காணவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில்14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி விட்டு அதனை திரும்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சிபிஐ அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த நிலையில் இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர். இந்த நிலையில்  கீதாஞ்சலி குழும உரிமையாளரான மெகுல் சோக்சி, ஆன்டிகுவா நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளது தெரியவந்தது. அவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டது.

இந்த நிலையில் வைர வியாபாரி மெகுல் சோக்சி ஆன்டிகுவா மற்றும் பார்புடா தீவுகளில் காணாமல் போயுள்ளதாக அவரது வழக்கறிஞர் விஜய் அகர்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மெகுல் சோக்சியை காணாமல் அவரது குடும்பத்தினர் கவலை அடைந்துள்ளதாகவும்  இதுபற்றி ஆலோசிக்க தன்னை அழைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஆன்டிகுவா போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்து உள்ளார்.

ஆன்டிகுவா தீவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு பிரபலமான உணவகத்திற்கு இரவு விருந்திற்காக மெகுல் சோக்சி சென்றதாகவும் அப்போதில் இருந்து அவரை காணவில்லை என்றும் ஆண்டிகுவா செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெகுல் சோக்சியின் வாகனம் ஜாலி ஹார்பர் என்னும் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரை தேடும் பணி தொடர்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.