மகாராஷ்டிரா அரசு கவிழும் ஆபத்து! என்ன செய்யப் போகிறார் உத்தவ் தாக்கரே?

மகாராஷ்டிரா அரசு கவிழும் ஆபத்து! என்ன செய்யப் போகிறார் உத்தவ் தாக்கரே?

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டனி அரசாங்கம் நடைபெற்று வருகிறது. பால் தாக்கரேவின் மகனும் சிவசேனாவின் தலைவருமான உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதலமைச்சராக உள்ளார்.

சிவசேனாவின் உட்கட்சி சண்டை

தற்போது அவரது கட்சியின் மூத்த தலைவரும் மகாராஷ்டிர நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே பாஜகவுடன் இணைந்து ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட முயற்சித்து வருகிறார்.

சிவசேனா கட்சிக்கு தற்போது மொத்தம் 55 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஷிண்டே தனது கட்சியின் 34 சட்டமன்ற உறுப்பினர்களுடன் குஜராத்தில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியுள்ளார். ஷிண்டே அணியைச் சேர்ந்த 34 சட்டமன்ற உறுப்பினர்களும் ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனாவின் தலைவராக்குவோம் என அறிவித்துள்ளனர்.

ஏக்நாத் ஷிண்டேவும் தாம் சிவசேனாவிலிருந்து விலகப்போவதில்லை என்றும், கட்சியில் இருந்து கொண்டே பால் தாக்கரேவின் ”இந்துத்துவ” கொள்கையை முன்னெடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

மராத்தியர் நலன் முதல் இந்துத்துவம் வரை

மராத்தியர்களின் தொழில் மற்றும் வேலை வாய்ப்புகளை தென்னிந்திய மாநிலத்தவர்கள் பறித்துக்கொள்வதாகக் கூறி மராத்தியர்களின் நலன் காக்க என உருவாக்கப்பட்டது சிவசேனா.

சிவசேனா என்றால் சிவாஜியின் படை என்று அர்த்தம். மராத்திய மன்னன் சிவாஜியின் பெயரில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. தொடக்க காலத்தில் மராத்தியர் நலனை பேசிய இந்த அமைப்பு 1970களில் இந்துத்துவக் கொள்கையை முன்னெடுக்க ஆரம்பித்தது. இதனால் மராத்தியர் அல்லாத இந்துக்களின் ஆதரவையும் பெற்றது.

சிவசேனா – பாரதிய ஜனதா கூட்டணி

1989ஆம் ஆண்டு முதல் சிவசேனா பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து வருகிறது. ஆனால் பாஜக சிவசேனாவைப் பயன்படுத்தி மகாராஷ்டிராவில் தனது கட்சியை வளர்த்துக்கொண்டது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, சிவசேனாவுடன் அதிகாரத்தைப் பகிர மறுத்துவிட்டது. இதன் காரணமாக 30 ஆண்டுகள் நீடித்த சிவசேனா - பாஜக கூட்டணி 2019ஆம் ஆண்டு உடைந்தது.

அதன் பிறகு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் இன்னும் சில கட்சிகளுடனான கூட்டணியில் ஆட்சி அமைத்தது சிவசேனா. 

 கட்சியில் பிளவு

தற்போது கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனக்கு 34 சட்டமன்ற ஆதரவு உள்ளதென்றும் தாம் தான் சிவசேனாவின் தலைவர் எனக் கூறுகிறார். உத்தவ் தாக்கரேவ் பிரிந்து சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் வந்து கேட்டுக் கொண்டால் தாம் முதலமைச்சர் பதவியை விட்டு விலகத் தயார் எனவும் அறிவித்துள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன் தான் இவ்வாறு செயல்படுவதாகவும். அதனால் பிளவு ஏற்பட்டால் எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழலாம் என்ற சூழல் நிலவுகிறது.

இதைத் தொடர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே என்ன முடிவெடுக்கப்போகிறார் என அனைவரும் கவனித்து வருகின்றனர்.

- ஜோஸ்