டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல்: தீவிரவாதிகள் அட்டூழியம்!

ஜம்மு விமான நிலையத்தில் டிரோன்களை பயன்படுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல்: தீவிரவாதிகள் அட்டூழியம்!

ஜம்மு விமான நிலையத்தில் டிரோன்களை பயன்படுத்தி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் விமானநிலையம் அடையாளம் காணப்பட்டு துல்லியமாக தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஜம்முவில் இந்திய விமானப்படை விமானங்களும், பயணியர் விமானங்களும் பயன்படுத்தி வரும் விமானநிலையத்தின் மீது வீரியம் குறைந்த இரண்டு குண்டுகள் டிரோன்கள் மூலம் வீசப்பட்டுள்ளன. அதிகாலை வேளையில் விமானநிலையத்தின் தொழில்நுட்பப் பிரிவு அருகே உள்ள கட்டிடத்தின் மேற்கூரை மீது ஒரு குண்டும் திறந்த வெளியில் மற்றொரு குண்டும் அடுத்தடுத்து வீசப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் கட்டடத்தின் கூரைப் பகுதி சேதமடைந்ததுடன், விமானப் படையைச் சேர்ந்த அதிகாரிகள் இரண்டு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. குண்டுகள் வெடித்ததால் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை சத்தம் கேட்டதாக விமான நிலைய ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து குண்டுவெடித்த பகுதிக்குக் தடயவியல் நிபுணர்கள் மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் விரைந்து சென்று வெடிகுண்டுகளை கைப்பற்றி ஆய்வு நடத்தினர்.  இந்திய விமானப் படையின் மேற்கு பிராந்திய காமாண்டர் விஆர் செளத்ரி தாக்குதல் நடத்தப்பட்ட விமானநிலையத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய விமானப்படை  துணைத் தளபதி அரோராவைத் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதனிடையே விமான நிலையத்தின் அருகில் உள்ள  நார்வல் பகுதியில் தீவிரவாதி ஒருவரைக் கைது செய்த காவல்துறையினர் அவரிடமிருந்து 5 கிலோ வெடிமருந்தை பறிமுதல் செய்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அம்மாநிலத்தை சேர்ந்த அனைத்துக் கட்சியினருடன், பிரதமர் மோடி ஆலோசனை நடத்திய நிலையில் இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளது. மேலும் டிரோன்களைப் பயன்படுத்தி தாக்குதல் நிகழ்த்தப்பட்டது இந்திய வான்பாதுகாப்புக்கு விடுக்கப்பட்ட சவாலாக பார்க்கப்படுகிறது.