புதுவையில் நடப்பது முதல்வர் ஆட்சியா? பாஜக ஆட்சியா? -  நாராயணசாமி கேள்வி.! 

புதுவையில் நடப்பது முதல்வர் ஆட்சியா? பாஜக ஆட்சியா? -  நாராயணசாமி கேள்வி.! 

புதுச்சேரியில் நடப்பது முதலமைச்சர் ஆட்சியா அல்ல பா.ஜ.க அமைச்சர் ஆட்சியா என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வியெழுப்பியுள்ளார். 

புதுவையில் 16ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுவை முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து பள்ளிகளை சுத்தம் செய்வது போன்ற வேலைகள் நடைபெற்றுவந்தன. ஆனால் திடிரென்று செய்தியாளர்களை சந்தித்த புதுவை மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமசிவாயம் நாளை பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லை என்று அறிவித்தார்.  

இது குறித்து அவர் கூறுகையில், பள்ளி-கல்லூரி திறப்பது குறித்து தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று முழுமையாக குறையவில்லை. எனவே பள்ளிகள் திறப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வந்தது. இந்த கோரிக்கை தொடர்பாக முதல்வர் ரங்கசாமி சார்பில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் ஆலோசனை நடத்தினோம்.  இந்த ஆலோசனையில் பள்ளி திறப்பை ஒத்திவைப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் என்ற விவரம் பின்னர் வெளியிடப்படும். இப்போதைக்கு பள்ளி- கல்லூரி திறப்பு இல்லை. தேதியோ, மாதமோ குறிப்பிட இயலாது என்று தெரிவித்தார்.

இப்படி முதல்வர் மற்றும் பள்ளிக்கல்வி துறை அமைச்சரின் அறிவிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவத்தை முன்னாள் முதல்வர் நாராயணசாமியும் விமர்சித்துள்ளார். 

இது தொடர்பாக நாராயணசாமி கூறுகையில், புதுச்சேரியில் நடப்பது முதலமைச்சர் ஆட்சியா அல்ல பா.ஜ.க அமைச்சர் ஆட்சியா என தெரியவில்லை. முதலமைச்சர் அறிவிக்கின்றார் அமைச்சர் இல்லை என்று மறுநாள் அறிவிக்கின்றார் என்று கூறிய அவர், புதுச்சேரியில் முதலமைச்சர் தான் ஆட்சி செய்கின்றன என கேள்வி எழுப்பினார்.