வலுவடைந்தது ‘யாஸ்’ புயல்... ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கனமழை... கடலோர மக்கள் வெளியேற்றம்!!

வலுவடைந்தது ‘யாஸ்’ புயல்... ஒடிசாவில் சூறைக்காற்றுடன் கனமழை...  கடலோர மக்கள் வெளியேற்றம்!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘யாஸ்’ புயல் காரணமாக ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் சூறை காற்றுடன் கூடிய பலத்த மழை கொட்டித் தீர்த்து வருகிறது.

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி ஒடிசாவின் பாலசோர் அருகே பாரதீப் மற்றும் சாகர் தீவுக்கு இடையே நாளை மதியம் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அப்போது மணிக்கு 165 முதல் 180 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் எதிரொலியாக இந்தியாவின் கிழக்கு கடற்கரை மாநிலங்களான ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் ஆகியன பெரும் பாதிப்பை சந்திக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில்  கடற்படை, விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புக்குழு என மத்திய பாதுகாப்பு நிறுவனங்கள் என அனைத்தும் களத்தில் இறக்கப்பட்டு உள்ளன.கோபுர விளக்குகள், தேடல் விளக்குகள், உயர் திறன் கொண்ட ஜென்செட்டுகள், போன்ற மீட்பு கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.  

யாஸ் புயல் எதிரொலியாக ஒடிசா மாநிலத்தின் கேந்திரபாதா, ஜகத்சிங்க்பூர், பாலசோர், பரதீப் மற்றும் பத்ராக் ஆகிய கடலோர பகுதிகளில் நேற்று முதல் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருகிறது. இவை புயலால் அதிகம் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதியாக கண்டறியப்பட்டு அங்குள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவல் சூழல் இருப்பதால் அவர்கள் அனைவருக்கு முககவசம், சானிடைசர், போன்ற அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் எனவும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.