டீ விற்றவன் கையில் நாடு..! அனல் பறக்கும் இறுதிகட்ட குஜராத் தேர்தல் பிரச்சாரம்..!

குஜராத் சட்டசபை தேர்தலில் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது...
தேர்தல் பிரச்சாரம்:
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்புகளை ஏற்படுத்தியுள்ள குஜராத் சட்டசபை தேர்தல் களம் விறுவிறுப்பைக் கண்டுள்ளது. அதில் உள்ள 182 தொகுதிகளில் முதற்கட்டமாக 89 தொகுதிகளில் வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றனர். குஜராத்தில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
பாஜக பிரச்சாரம்:
நேற்று, பலிதானா, அஞ்சார், ஜாம்நகர் ஆகிய 3 பகுதிகளில் சூறாவளிப் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, ராஜ்கோட்டில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பொருளாதார நிபுணரான பிரதமர் கையில் 10 ஆண்டுகளில் ஒரு படி மட்டுமே உயர்ந்த இந்திய பொருளாதரம், டீ விற்பவன் பிரதமர் ஆனதும் உலகத்தின் ஐந்தாவது இடத்திற்கு உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும், 2-ஜி அலைக்கற்றையை வைத்து காங்கிரஸ் ஊழல் செய்த அதே நாட்டில், பாஜக 5-ஜியை நோக்கி பயணிப்பதாகவும் கூறியுள்ளார்.
காங்கிரஸ் பிரச்சாரம்:
மறுமுனையில், நர்மதா மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியும், அமித்ஷாவும் காங்கிரஸ் 70 வருடங்களில் என்ன செய்தது என கேட்கிறார்கள். நாங்கள் எதுவுமே செய்யவில்லையென்றால் ஜனநாயகமே கிடைத்திருக்காது. நீங்கள் உங்களை ஏழை என்கிறீர்கள். நானும் ஏழைதான். ஏழையிலும் பரம ஏழை" என குறிப்பிட்டார்
ஆம் ஆத்மி பிரச்சாரம்:
இதற்கிடையில் சூரத்தில் வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்திய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி குஜராத்தில் 92 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவது உறுதி என்று தெரிவித்துள்ளார். மேலும், இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவு ஆம் ஆத்மிக்குத்தான் உள்ளது என்று பேசிய அவர், வியாபாரிகளும் ஆம் ஆத்மிக்கே வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுகொண்டுள்ளார்.
அனல் பறக்கும் பிரச்சாரம் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 89 தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது.