2021-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என மத்திய அரசு கூறுவது புரளி.... மம்தா பானர்ஜி விமர்சனம்

2021-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என மத்திய அரசு கூறுவது புரளி என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்

2021-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் தடுப்பூசி என மத்திய அரசு கூறுவது புரளி.... மம்தா பானர்ஜி  விமர்சனம்

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடங்கியது. முதலில் கொரோனா தடுப்பூசி செலுத்த மக்கள் மிகப்பெரிய அளவில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கொரோனாவின் 2-வது அலை ஏராளமான மக்களை சுருட்டி எமனிடம் சேர்த்து வருவதால், தற்போது தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

மாநில அரசுகளும் விழிப்புணர்வை ஏற்படுத்தி எவ்வளவு விரைவில் தடுப்பூசி செலுத்த முடியுமோ, அதற்கான பணிகளை செய்து வருகிறது. ஆனால் தடுப்பூசி தட்டுப்பாட்டால், பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தினசரி ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், 2021 டிசம்பர் 31-ந்தேதிக்குள் 18 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விடும் என்றும் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.

இந்த நிலையில் மத்திய அரசு கூறியது வெறும் புரளி என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய மம்தா பானர்ஜி,  பீகார் தேர்தலுக்கு முன், அம்மாநில மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு உறுதி அளித்ததாகவும், ஆனால் தேர்தலுக்கு பின் ஒன்றுமே நிகழவில்லை என்றும் விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய மம்தா பானர்ஜி, மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.