துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கரை ஒதுங்கிய படகு…மக்கள் அச்சம்!

துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கரை ஒதுங்கிய படகு…மக்கள் அச்சம்!

மஹாராஷ்டிர மாநிலத்தின் ராய்கட் கடற்கரைக்கு அருகில் உள்ள  பகுதியில் நேற்று சந்தேகத்துக்கு  இடமாக ஒரு நவீன படகு நின்றது. இதை பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். படகில் யாரும் இல்லாததால் சந்தேகம் அடைந்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

ராய்கட் போலீஸ் அதிகாரிகள் விரைந்து சென்று படகில் சோதனை நடத்தினர். அந்த படகி இருந்த பெட்டியில் ஏகே 47 ரக துப்பாக்கிகள் மூன்றும், அதற்கு பயன்படுத்தும் தோட்டாக்களும் இருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதைக் கண்டவுடன் யாராவது  அப்பகுதியில் ஊடுருவி இருப்பார்களோ என்று சந்தேகம் எழுந்தது.

விசாரணையை தீவிரப்படுத்தினர் காவல்துறையினர். இந்தப் படகு மோசமான வானிலை காரணமாக கைவிடப்பட்டு இங்கு வந்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில்,‘இங்கிலாந்து பதிவு செய்யப்பட்ட இந்த படகு, ஆஸ்திரேலிய பெண்ணுக்கு சொந்தமானது. ஓமனில் இருந்து ஐரோப்பாவுக்கு செல்லும்போது, கடந்த ஜூன் 26ம் தேதி மோசமான வானிலை காரணமாக படகில் இருந்தவர்கள் உதவி கோரினர். மஸ்கட் அருகே அவர்களை கடற்படையினர் மீட்டனர். கைவிடப்பட்ட இந்த படகு, இங்கு வந்து கரை ஒதுங்கியுள்ளது. படகு சேதமடைந்து உள்ளது,’என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.இருப்பினும்  படகு குறித்த தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.