அமைச்சர்கள் மீது வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி...நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு!

அமைச்சர்கள் மீது வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி...நாடாளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு!

அதிமுக அமைச்சர்கள் மீது வழக்கு தொடுத்து சோதனை நடத்துவது அரசியல் காழ்ப்புணர்ச்சியே என அதிமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை குற்றம் சாட்டியுள்ளார்.

அண்ணா பிறந்தநாள் விழா

அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள 'அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்' கட்சி அலுவலகத்தில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை அண்ணா திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை,

தமிழ் உணர்வையும், திராவிட கலாச்சாரத்தையும் சாதாரண மக்களிடம் எடுத்துச் சென்றவர் அண்ணா என்றும் தமிழின் மீது இருந்த அதீத உணர்வினால் மதராஸ் என்பதை தமிழ்நாடு என பெயர் மாற்றியவர் அண்ணா என்றும் மாநில சுயாட்சி, தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளை இந்திய அரசின் அலுவல் மொழியாக்க வேண்டும் என வலிமையாக குரல் கொடுத்தவர் அண்ணா என அவர் கூறினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை

செப்டம்பர் -13 அன்று கோவை சுகுணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீடு, வடவள்ளி பகுதியில் உள்ள ஒப்பந்ததாரரான சந்திரசேகர் வீடு உள்ளிட்ட 9 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை நடைபெற்றது. மேலும் தமிழ்நாடு முழுவதும் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்பான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடுத்து சோதனை நடத்துவது அரசியல் காழ்ப்புணர்ச்சியே என குற்றம் சாட்டிய அவர், செந்தில்பாலாஜி உட்பட திமுக அமைச்சர்கள் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.