2024க்குள் உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலை... மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்...

60 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட, உலகத் தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதே தனது நோக்கம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

2024க்குள் உலகத்தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலை... மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்...
இந்தியாவில் சாலை மேம்பாடு குறித்த 16ஆவது ஆண்டு மாநாடு நேற்று டெல்லியில் நடைபெற்றது. காணொலி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, சாலை கட்டுமானத்தில் எஃகு மற்றும் சிமென்ட் பயன்பாட்டைக் குறைத்து, புதுமை மற்றும் ஆராய்ச்சியின் மூலம் தரமான சாலைகளை அமைக்க வேண்டும் என்றார்.
 
மேலும், CNG, LNG மற்றும் எத்தனால் ஆகியவற்றை சாலை உபகரண இயந்திரங்களுக்கு பயன்படுத்த வேண்டும் எனக்கூறிய அமைச்சர், இறக்குமதிக்கு மாற்றான, செலவு குறைந்த, மாசு இல்லாத மற்றும் உள்நாட்டு முறைகள் மற்றும் மாற்று எரிபொருளின் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். 
 
சுமார் 63 லட்சம் கிலோ மீட்டர் சாலைகளுடன், உலகின் இரண்டாவது பெரிய சாலை வலையமைப்பு கொண்ட இந்தியாவில், பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்றார். தேசிய உள்கட்டமைப்புக்கான என். ஐ.பி. திட்டத்தின் மூலம் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக, மத்திய அரசு 111 லட்சம் கோடி முதலீடு செய்வதாகக் கூறிய நிதின் கட்கரி, ஒரு நாளைக்கு 40 கிலோ மீட்டர் என்ற விகிதத்தில், 2024ஆம் ஆண்டுக்குள் 60 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்ட உலகத் தரம் வாய்ந்த தேசிய நெடுஞ்சாலையை நிர்மாணிப்பதே தனது நோக்கம் எனக் கூறினார்.