மீண்டும் காங் தலைவராகிறாரா சோனியா காந்தி?

காங்கிரஸ் கட்சியின்  தலைவராக சோனியா காந்தி தொடர்ந்து செயல்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

மீண்டும் காங் தலைவராகிறாரா சோனியா காந்தி?

2019 மக்களவை தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை அடுத்து, அக்கட்சியின் தலைவராக செயல்பட்டு வந்த ராகுல் காந்தி கடும் விமர்சனத்திற்கு ஆளானார். அதைத்தொடர்ந்து அப்பொறுப்பிலிருந்து விலகிய அவர், பல்வேறு வற்புறுத்தலுக்கு பின்பும் அந்த பதவியை நிராகரித்து வருகிறார். இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியா காந்தி நீடித்து வருகிறார்.

இதனிடையே நிரந்தர தலைவரை நியமிக்கும்படி கட்சியினர் சோனியாவை வலியுறுத்தி வந்தனர். இதன் பயனாக மே மாதம் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக அந்த தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பழம் பெரும் கட்சியான காங்கிரஸ் மீண்டும் தனது பலத்தை நிரூபிக்க, மக்களவை மற்றும் அடுத்தாண்டு 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலை முன்வைத்து காய்களை நகர்த்தி வருகிறது. இதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

ஆனால்  2024 மக்களவை தேர்தல் வரை சோனியா காந்தியே அந்த கட்சியின் தலைமை பொறுப்பில் நீடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு உதவியாக குலாம் நபி ஆசாத், சச்சின் பைலட், குமாரி செல்ஜா, முகுல் வாஸ்னிக் மற்றும் ரமேஷ் சென்னிதாலா ஆகியோருக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்படக் கூடும் என சொல்லப்படுகிறது.

ராகுல் காந்தி அந்த பதவியில் அமர்த்தப்படாவிட்டாலும், தொடர்ந்து கட்சி பணிகளை கவனித்து மேலிட ஆலோசனையில் கலந்து கொள்வார் எனவும், காங்கிரஸ் பொது செயலாளரான பிரியங்கா காந்தியும், உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தல் பணியை கவனித்துக்கொள்வார் எனவும் கூறப்படுகிறது.