8 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு “டேப்லெட் கம்யூட்டர்கள்” வழங்குவோம் - ஆந்திர முதல்வர் அறிவிப்பு!

8 ஆம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு “டேப்லெட் கம்யூட்டர்கள்” வழங்குவோம் - ஆந்திர முதல்வர் அறிவிப்பு!

ஆந்திராவில் 1 முதல் 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு இலவசமாக பைகள் வழங்கும் நிகழ்ச்சியில், 8 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு “டேப்லெட் கம்யூட்டர்கள்” வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளோம் என்று ஆந்திர முதல்வர் அறிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம் ஆதோனியில்  1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் தோளில் மாட்டிச்செல்ல கூடிய வகையில் உள்ள பைகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை, அம்மாநிலத்தின் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, ஆந்திர மாநிலத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவியருக்கும் கல்வி பரிசு எனும் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் இந்த பைகளை இலவசமாக வழங்கி வருகிறோம். அதன் தொடர்ச்சியாக தற்போது 3ஆம் ஆண்டாக இதனை வழங்கி வருகிறோம். இதன் மூலம் 47,40,421 மாணவ மாணவியர்கள் பயனடைவார்கள். இதற்கென அரசும் ரூ.931 கோடி நிதியை செலவு செய்துள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தங்களது பிள்ளைகளை பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கும்  தாய்மார்களின் வங்கி கணக்கில் ஆண்டுதோறும் தலா 15 ஆயிரம் செலுத்தி வருகிறோம். மேலும் “அன்றும் இன்றும்” திட்டத்தின் கீழ், போர்க்கால அடிப்படையில்  பள்ளிகளில் சீரமைப்பு பணிகள் சரியாக நடந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், இனி 8 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவியருக்கு “டேப்லெட் கம்யூட்டர்கள்” வழங்குவோம். இதனால் மாணவர்கள் விரைவில் தங்கள் கல்வி அறிவை வளர்த்துக்கொள்வார்கள். இதேபோன்று ஒவ்வொரு கல்வியாண்டின் தொடக்கத்திலும் அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவசமாக பள்ளி சீருடை, ஷூக்கள், சாக்ஸ்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் கூடுதலாக 7 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். இது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.