வருண் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்... பெங்களூரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

குரூப் கேப்டன் வருண் சிங்கைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

வருண் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்... பெங்களூரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று முன்தினம் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். அதில் பயணித்த குரூப் கேப்டன் வருண் சிங் மட்டும் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 80 சதவீத தீக்காயம் அடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இந்நிலையில், வருண் சிங்கின் உடல்நிலை மோசமடைந்ததால் மேல் சிகிச்சைக்காக பெங்களூரு கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. அதன்படி, வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் இருந்து சூலூர் விமானப்படை தளத்திற்கு அழைத்து வரப்பட்டு, அங்கிருந்து மருத்துவ வசதிகளுடன் கூடிய தனி விமானம் மூலம் பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனைக்கு அழைத்துச் வரப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார்.  வருண் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையிலேயே உள்ளது. 

இதனிடையே மக்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  குரூப் கேப்டன் வருண் சிங்கைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.  கடந்த ஆண்டு தேஜஸ் போர் விமானத்தை அவசரமாகத் தரையிறக்கி, பெரும் விபத்தைத் தவிர்த்தவர் வருண் சிங். இதற்காக அவருக்கு இந்த ஆண்டு சவுரிய சக்ரா விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.