12 முதல் 18 வயது உட்பட்டோருக்கான தடுப்பூசி விலை குறைப்பு... கோரிக்யை ஏற்ற சைடஸ் கேடிலா நிறுவனம்...

12 முதல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான சைகோவ்- டி கொரோனா தடுப்பூசியின் விலையை குறைக்க,   சைடஸ் கேடிலா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

12 முதல் 18 வயது உட்பட்டோருக்கான தடுப்பூசி விலை குறைப்பு... கோரிக்யை ஏற்ற சைடஸ் கேடிலா நிறுவனம்...

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணியை, மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன. தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதால் மீண்டும் பாதிப்பு அதிகரிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் இந்தியாவில் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு தடுப்பூசி இதுவரை செலுத்தப்படவில்லை. 

உலகில் பல நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட தொடங்கி உள்ளன. அந்த வகையில் இந்தியாவிலும் 12 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி, அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்ட சைடஸ் கேடிலா நிறுவனம், குழந்தைகளுக்கான தடுப்பூசியை தயாரித்து வருகிறது. அவசர கால பயன்பாட்டிற்காக, இதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி, இன்னும் தடுப்பூசி இயக்கத்தில் சேர்க்கப்படவில்லை.

ஆனால் இந்த தடுப்பூசியின் விலை மிக அதிகமாக உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. தடுப்பூசியின் 3 டோஸ்களுக்கு ஆயிரத்து 900 ரூபாய் என விலையை நிர்ணயித்து அரசுக்கு முன்மொழிந்துள்ளது. இதனையடுத்து தடுப்பூசியின் விலையை குறைக்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்த நிலையில், தனது கொரோனா தடுப்பூசியின் விலையை குறைக்க சைடஸ் கேடிலா நிறுவனம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரு டோஸ் விலையை 265 ரூபாயாக குறைக்க முன்வந்துள்ளதாகவும், விரைவில் இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.