கொரோனா காலத்தில் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு.. 85 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு!!

கொரோனா முதல் பொது முடக்க காலமான 2020-2021ம் ஆண்டில் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு வைத்து கொண்டதால் நாடு முழுவதும் சுமார் 85 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. 

கொரோனா காலத்தில் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு..  85 ஆயிரம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிப்பு!!

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திர சேகர் கவுர், இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு வைத்து கொண்டதன் மூலம் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள, தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு, 2020-2021ம் ஆண்டில் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு வைத்து கொண்டதால் 85,268 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் 10 ஆயிரத்து 498 பேரும், ஆந்திராவில் 9 ஆயிரத்து 521 பேரும், கர்நாடகாவில் 8 ஆயிரத்து 947 பேரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக மத்திய பிரதேசத்தில் 3 ஆயிரத்து 37 பேரும், மேற்குவங்கத்தில் 2 ஆயிரத்து 757 பேரும் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

இதில் குறிப்பிடக்கூடிய விஷயம் என்னவென்றால், 2011-2012ம் ஆண்டில் 2 லட்சத்து 40 ஆயிரமாக இருந்த எய்ட்ஸ் பாதிப்பு, 2019-2020ல் 1 லட்சத்து 44 ஆயிரமாக குறைந்தது. தற்போது  2020-2021ம் ஆண்டில் எயிட்ஸ் பாதிப்பு 85 ஆயிரத்து 268-ஆக மேலும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.