ரோப்கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.. இரு பெண்கள் பலி - 46 பேர் அந்தரத்தில் சிக்கி தவிப்பு!!

ஜார்க்கண்டில் ரோப் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் சுற்றுலா வந்த இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் அந்தரத்தில் சிக்கி தவிக்கும் 46 பேரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

ரோப்கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.. இரு பெண்கள் பலி - 46 பேர் அந்தரத்தில் சிக்கி தவிப்பு!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தியோகர் பகுதியில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக ரோப் கார்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் திரிகுத் மலையில் உள்ள பைத்யநாத் கோயிலுக்கு செல்வதற்காக சுற்றுலா பயணிகள் ரோப்கார்களில் ஏறியுள்ளனர்.

ஆனால் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால், இரு ரோப்கார் கேபின்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இதனால் பிற ரோப்கார் கேபின்களும் அடுத்தடுத்து மோதிக்கொண்டன. தகவல் அறிந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கேபின்களில் சிக்கி தவிப்போரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 18 பேர் மீட்கப்பட்ட நிலையில் இரு பெண்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர கேபின்களில் இருந்து கீழே குதிக்க முயன்ற இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே மலை உச்சியில் உள்ள ரோப்கார்களில் இருந்து சுற்றுலா பயணிகளை மீட்பதில் சிரமம் நீடிப்பதால், இப்பணியில் 2 எம்.ஐ- 17 ரக ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், உள்ளூர் மக்கள் இந்தோ- திபெத்திய எல்லை படையினரும் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.