
கர்நாடகாவில் மேடையில் பாடிக்கொண்டிருந்த பிரபல பாடகர் மீது தண்ணீர் பாட்டில் வீசிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹம்பி உட்சவ் திருவிழா :
கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டத்தில் உள்ள உலக பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான ஹம்பி நகரில், ஹம்பி உட்சவ் திருவிழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவை விஜயநகர பேரரசின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக அந்த பேரரசு இருந்த காலத்திலிருந்தே இவ்விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், இந்த விழாவிற்கு நாடு முழுவதிலும் இருந்து தலைசிறந்த கலைஞர்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.
பாடகர் மீது பாட்டில் வீசிய இளைஞர்கள் :
அந்தவகையில் நேற்று இரவு நடைபெற்ற ஹம்பி உட்சவ் திருவிழாவில், பத்மஸ்ரீ விருது பெற்ற பாடகர் கைலாஷ் கேர் பங்கேற்று பல்வேறு பாடல்களை பாடிக்கொண்டிருந்தார். அப்போது அவர் கன்னட மொழி பாடல்களை பாடாத காரணத்தினால் இரண்டு இளைஞர்கள் தங்கள் கையிலிருந்த தண்ணீர் பாட்டிலை அவர் மீது தூக்கி வீசினர். இதையடுத்து அந்த இளைஞர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிகழ்ச்சியை நிறைவு செய்த பாடகர் :
இதற்கிடையில், பாடகர் தன் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதை கூட பொருட்படுத்தாமல் அனைத்து பாடல்களையும் பாடி தனது நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இருப்பினும், பிரபல பாடகர் மீது பார்வையாளர்கள் தண்ணீர் பாட்டிலை கொண்டு தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.