மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே:விலைவாசி உயர்வுக்கு காரணம் - ப.சிதம்பரம்!

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளின் காரணமாகவே பெட்ரோல் டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களில் விலை அதிகரித்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே:விலைவாசி உயர்வுக்கு காரணம் - ப.சிதம்பரம்!

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் உள்ள உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் ‘சிந்தனை அமர்வு’ என்ற 3 நாள் மாநாடு நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.மாநாட்டில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் உள்பட ஏராளமான மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றுள்ள நிலையில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் பொருளாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், நாட்டில் வேலையின்மை விகிதம் 7.88% ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், 2019ம் ஆண்டில் இருந்ததை விட 2022ம் ஆண்டில் ரயில்வே, துணை ராணுவம் உள்ளிட்ட பணிகளுக்கான காலி பணியிடங்கள் அதிகரித்து உள்ளதாகவும் சாடினார்.

இருப்பினும், நாட்டில் உள்ள இளைஞர்கள் வேலை தேடி அலைவதாகவும் சாடினார். மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே பெட்ரோல் டீசல் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களில் விலை அதிகரிப்புக்கு காரணம் என சாடிய அவர், பொருளாதார கொள்கைகளில் உடனடி மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே நாட்டின் பொருளாதாரத்தை ஓரளவுக்கு உயர்த்த முடியும் என்றார்.  

மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை என்பது அடுத்த 3 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு தொகையில் 78 ஆயிரத்து 704 கோடி நிலுவையில் உள்ளதாகவும் கூறினார்.