இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடா் இன்று நடைபெறவுள்ளது. 

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடா் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறவுள்ளது. அதன்படி முதல் நாளில், அரசியல் சாசன நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் 75 ஆண்டுகால நாடாளுமன்ற பயணம் குறித்து விவாதம் நடைபெறவுள்ளது. 

இதுதவிர சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் நியமனம், பணிநிபந்தனைகள், பதவிக் காலம் மசோதா இந்த கூட்டத் தொடரில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் நாடாளுமன்ற செய்தி இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புழக்கத்தில் இல்லாத சட்டங்களை ரத்து செய்ய வகை செய்யும் ரத்து மற்றும் திருத்த மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதனால், அதுபற்றி இந்த சிறப்பு கூட்டத் தொடரில் விவாதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த சிறப்பு கூட்டத் தொடாின் முதல் நாள் நிகழ்வுகள் வழக்கம்போல் பழைய கட்டடத்திலேயே நடைபெற உள்ளன. நாளை முதல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் சிறப்பு கூட்டத் தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க || ''தேர்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை'' - சசிகலா