டெல்லியில் நாளை நிதி ஆயோக் நிர்வாக கவுன்சிலின் ஏழாவது கூட்டம்...!

டெல்லியில் நாளை நிதி ஆயோக் நிர்வாக கவுன்சிலின் ஏழாவது கூட்டம்...!

பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் நிர்வாக கவுன்சிலின் ஏழாவது கூட்டம் நடைபெறவுள்ளது.

நிதி ஆயோக் அமைப்பு:

நிதி ஆயோக் அமைப்பு மத்திய அரசின் கொள்கைகளை வடிவமைக்கும் அமைப்பாக இயங்கி வருகிறது. இந்த அமைப்பு முதலில் திட்ட கமிஷன் என்ற அமைப்பாகவே இருந்தது. 

திட்ட கமிஷன்:

நாடு முழுவதும் உள்ள மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பாகவே  திட்ட கமிஷன் இருந்து வந்தது. ஆனால், கடந்த 2014-ல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், திட்ட கமிஷன் அமைப்பு  கலைக்கப்பட்டது. இதற்கு பதிலாக நிதி ஆயோக் அமைப்பு உருவாக்கப்பட்டது. இது, மத்திய அரசின் கொள்கைகளை வடிவமைக்கும் அமைப்பாக இயங்கி வருகிறது. அதன்பின், நிதி ஆயோக்கின் உயரிய அமைப்பாக நிர்வாக கவுன்சில் உருவாக்கப்பட்டது. இந்த குழு, பிரதமர் மோடி தலைமையில் இயங்கி வருகிறது.

ஆண்டுதோறும் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டம்:

பிரதமர் தலைமையில் இயங்கி வரும், நிதி ஆயோக் நிர்வாக கவுன்சிலின் முதல் கூட்டம் என்பது 2015ல் நடைபெற்றது. அதன் பிறகு இந்த கூட்டமானது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஆனால், கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக கூட்டம் நடைபெறவில்லை. அதேபோன்று கடந்த ஆண்டும், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக இந்த கூட்டம் நடைபெற்றது.

நிதி ஆயோக்கின் ஏழாவது கூட்டம்:

இந்நிலையில், தற்போது கொரோனா பரவல் என்பது குறைந்து காணப்படுவதால், நிதி ஆயோக் நிர்வாக கவுன்சிலின் ஏழாவது கூட்டம், டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையின் கலாச்சார மையத்தில் பிரதமர் மோடி தலைமையில் நாளை நடைபெற உள்ளது.

கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பது:

நாளை நடைபெறவுள்ள நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில், வேளாண் துறையில் தன்னிறைவை எட்டுதல், தேசிய கல்விக் கொள்கை அமலாக்கம், நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுகிறது. மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுனர்கள், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.