கர்நாடகா: ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்த ஆளுநர்!

கர்நாடகா: ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுத்த ஆளுநர்!

கர்நாடக மாநில முதலமைச்சர் பதவியேற்பு விழா பெங்களூருவில் நாளை நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சித்தராமையா மற்றும் டி.கே சிவக்குமார் உட்பட காங்கிரஸ் குழு உறுப்பினர்களுக்கு ஆளுநர் தாவர் சந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

கர்நாடக  சட்டப்பேரவை தேர்தலில், 135 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றிறபெற்றது. இந்நிலையில், முதலமைச்சர் சித்தராமையாவா அல்லது டி.கே.சிவகுமாரா என கடந்த ஒரு வாரமாகவே குழப்பம் நீடித்து வந்தது. தொடர்ந்து டெல்லி சென்ற இருவரும் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவையும், ராகுல்காந்தியையும் தனித்தனியாக சந்தித்துப் பேசினர். 

இந்நிலையில் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் முடியும் வரை, கர்நாடக காங்கிரஸ் தலைவராக டி.கே.சிவகுமார் தொடர்வார் எனவும் தெரிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம் கர்நாடக அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் டெல்லி சென்று விட்டு பெங்களூரு திரும்பிய சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமாருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து வழிநெடுகிலும் கூடியிருந்த கட்சித் தொண்டர்கள் சித்தராமையா, டி.கே.சிவகுமார் கார்கள் மீது மலர்களை தூவியும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

இதற்கிடையே கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சித்தராமையாவுக்கு முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வாழ்த்து தொிவித்துள்ளாா். மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுமென அவா் தனது ட்விட்டல் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளாா். 

இதனிடையே பெங்களூருவில் நடைபெற்ற கர்நாடக மாநில காங்கிரஸ் சட்டமன்ற குழு கூட்டத்தில்  காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவராக சித்தராமையா ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு கடிதத்துடன் கர்நாடக ராஜ்பவன் சென்ற சித்தராமையா, ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை சந்தித்து  ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரினார்.

சித்தராமையாவின் கோரிக்கையை ஏற்ற ஆளுநா் தாவர் சந்த் கெலாட் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சித்தாமையா மற்றும் டி.கே.சிவக்குமார் உட்பட குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளாா். இதனையடுத்து முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டிகே சிவகுமாரும் நாளை பெங்களூரு கண்டிர்வா மைதானத்தில் நண்பகல் 12.30 மணிக்கு பதவி ஏற்கவுள்ளனா்.

இதனிடையே இன்று காலை 10 மணிக்கு இருவரும் இணைந்து தனி விமானத்தில் டெல்லி செல்கின்றனர். அங்கு இருவரும் அமைச்சரவையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடம் அளிப்பது மற்றும் துறைகளை ஒதுக்கீடு செய்வது குறித்து கட்சி தலைமையுடன் ஆலோசனை நடத்த உள்ளனர். இதற்கிடையில் நாளை நடைபெறவுள்ள பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் முதலமைச்சர் நிதீஸ்குமார், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளா்கள் உள்ளிட்ட பல்வேறு மாநில எதிர்கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க:"ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தடியடி நடத்த உத்தரவிட்டது ஓ.பி.எஸ்.தான்" உண்மையை போட்டுடைத்த ஜெயக்குமார்..!