அரசு திட்டங்களின் முழு பயன்களும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு !!

அரசு செயல்படுத்தும் திட்டங்களின் முழு பயன்களும் மக்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அரசு திட்டங்களின் முழு பயன்களும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் - பிரதமர் மோடி பேச்சு !!

பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப் பயணமாக தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு இன்று காலை சென்றார். அங்கு, ராஜ்கோட் மாவட்டம் அட்கோட்டில் 200 படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளை அவர் பார்வையிட்டார்.

பின்னர் மக்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கடந்த 8 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் வெட்கி தலைகுனியும் செயலை ஒருபோதும் செய்யவில்லை என குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த 8 ஆண்டுகளில் மகாத்மா காந்தி, சர்தார் படேலின் கனவான இந்தியாவை உருவாக்க முயற்சித்தோம் என்றும்,  பல்வேறு திட்டங்கள் மூலம் ஏழைகளுக்கு சேவை செய்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சித்தோம் எனவும் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து காந்திநகர் சென்ற பிரதமர் மோடி, உலகின் முதல் நானோ யூரியா தொழிற்சாலையை திறந்து வைத்தார். பின்னர் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த ஆலையில் ஒரு பை சிறுமணி யூரியாவிற்கு சமமாக 500 மி.லி. பாட்டிலில் நானோ யூரியா தயாரிக்கப்படுகிறது என குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்மோடி, நானோ யூரியா தொழிற்சாலை மூலம் போக்குவரத்து செலவுகள் குறைக்கப்படும் என்றும், இதன் மூலம் சிறு விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் உறுதி அளித்தார்.