
காலதாமதமாக வருவதாக கூறி பயணிகளை விமான நிறுவனங்கள் விமானத்தில் ஏற்ற மறுப்பதாக குற்றச்சாட்டு தொடர்ச்சியாக எழுந்ததை அடுத்து மத்திய அரசு சமீபத்தில் ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது. அதில் விமானத்தில் பயணிகளை ஏற்ற மறுக்கும் விமான நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் எச்சரித்திருந்தது.
இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் காலதாமதமாக வந்ததாக கூறி பெண் பயணி ஒருவரை ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர்கள் விமானத்தில் ஏற்ற மறுக்க, இதை கேட்டு பெண் பயணி அதிர்ச்சியில் மயங்கி விழுந்துள்ளார்.
இதையடுத்து விமான நிறுவன மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் இதய நோயாளி என்றும் கடும் சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வருவதாகவும் விமானத்தை பிடிக்க வேகமாக ஓடி வந்ததால் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.