பேச்சுவார்த்தைக்கு வாங்க... விவசாயிகளை அழைக்கும் மத்திய அமைச்சர்...

போராட்ட பாதையை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வருமாறு டெல்லியில்  போராட்டம் நடத்தி வரும்  விவசாயிகளுக்கு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

பேச்சுவார்த்தைக்கு வாங்க... விவசாயிகளை அழைக்கும் மத்திய அமைச்சர்...
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி, கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக விவசாயிகளுடன்  மத்திய அரசு நடத்திய 11 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்த நிலையில் நேற்று  முதல்  டெல்லி ஜந்தர்மந்தரில் மீண்டும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர் விவசாயிகள். இந்த விவகாரத்தை  நாடாளுமன்ற இரு அவைகளிலும்  எழுப்பி மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்தன.
 
இந்தநிலையில், விவசாயிகள் போராட்டம் குறித்து டெல்லியில்  செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர், போராட்ட பாதையை கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களில் உள்ள ஆட்சேபகரமான அம்சங்களுடன் வந்தால், பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.