மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல்.. மக்களவையில் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு!!

மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல்.. மக்களவையில் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு!!

மின் கட்டணங்களை ஒழுங்குமுறை ஆணையங்களே மாற்றியமைப்பது தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த புதிய மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து  திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம். பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், கடந்த 18ம் தேதி தொடங்கியது. இக்கூட்டத்தொடரில் மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்கு முறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது, குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மின் கட்டணத்தை நிர்ணயிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கங்கள் கொண்ட மின்சார சட்டத்திருத்த மசோதாவானது தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, நாடாளுமன்றம் இன்று கூடியதும் மக்களவையில் வழக்கமான விவாதத்துக்கு பிறகு, மின்சாரத் துறை அமைச்சர் ஆர்.கே.சிங்  மின்சார சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

மக்களவையில் எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு

இதற்கு ஆரம்ப நிலையிலேயே திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப எதிர்கட்சிகள் வலியுறுத்தியதோடு, இது கூட்டாட்சி தத்துவதற்கு எதிரானது எனவும் வாதிட்டனர்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியவர் கருணாநிதி

அப்போது பேசிய திமுக எம். பி. டி.ஆர்.பாலு, மசோதாவால் தமிழ்நாட்டில் அமலில் உள்ள விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் பாதிக்கப்படும் என கூறினார். நாட்டிலேயே முதன்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியவர் கருணாநிதி என சுட்டிக்காட்டிய அவர், சட்டத்திருத்தம் அமலுக்கு வந்தால் இலவச மின்சாரத்தை நம் பியுள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவர் எனவும் தெரிவித்தார்.

எதிர்கட்சி எம். பிக்கள் வெளிநடப்பு

இருப் பினும் எதிர்கட்சிகளின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், அவையில் இருந்து எதிர்கட்சி எம். பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.