செல்போன் கடையில் திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள்...! பல விலையுயர்ந்த பொருட்கள் பறிமுதல்..!

செல்போன் கடையில் திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள்...! பல விலையுயர்ந்த பொருட்கள் பறிமுதல்..!

புதுச்சேரி வில்லயனூர் வி.தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்தவர் லோகேஷ்வரன். இவர் தனது தந்தை உடன் இணைந்து வில்லயனூர் காவல் நிலையம் அருகே விழுப்புரம் மெயின் ரோட்டில் செல்போன் விற்பனை கடை நடத்தி வருகிறார்,

கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவு இவரின் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் யாரோ ரூ.3 லட்சம் மதிப்பிலான செல்போன்கள், பூளு டூத் ஸ்பிக்கர், ஹெட்செட் , சிசிடிவி கேமிரா காட்சிகள் பதிவாகும் டிவிஆர் இயந்திரம் ஆகியவற்றை திருடி சென்றனர். இது தொடர்பாக லோகேஷ்வரன் வில்லியனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையின் அருகே இருந்த சிசிடிவி கேமிராவை ஆய்வு செய்தனர். அதில் மூன்று நபர்கள் செல்போன் கடை அருகே செல்வது பதிவாகி இருந்ததை அடுத்து மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்தனர். 

அந்த விசாரணையில், அவர்கள் வில்லியனூர் எம்.ஆர் நகரை சேர்ந்த மூன்று சிறுவர்கள் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுவர் ஒருவரின் உறவினரான சென்னை பூந்தமல்லியை சேர்ந்த கார் டிரைவர் மாலிக் பாட்ஷா கொடுத்த ஆலோசனை படி இந்த திருட்டு சம்பவம் அரங்கேற்றியதை கண்டறிந்தனர். மேலும், இவர்கள் திருடிய செல்போன்களை மாலிக் பாஷாவிடம் கொடுத்துள்ளனர் எனவும்  விசாரணையில் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து மாலிக் பாஷாவை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 16 விலை உயர்ந்த செல்போன்கள், பூளு டூத் ஸ்பிக்கர் மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட மூன்று சிறுவர்களை சீர் திருத்த பள்ளியிலும், மாலிக்கை புதுச்சேரி காலாபட்டில் உள்ள மத்திய சிறையிலும் அடைத்தனர்.