முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வைக் குழுவை மாற்றியமைக்க முடியாது - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வைக் குழுவை மாற்றியமைக்க முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை மேற்பார்வைக் குழுவை மாற்றியமைக்க முடியாது - உச்சநீதிமன்றம் திட்டவட்டம்

முல்லைப் பெரியாறு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணை இன்று காலை நடைபெற்ற போது, அணை பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும் வரை மேற்பார்வைக் குழுவை வலிமைப்படுத்தி கூடுதல் அதிகாரம் வழங்கலாமா? என்பது குறித்து மத்திய நீர்வள ஆணையம் பதிலளிக்க கூறியிருந்தது.

இந்நிலையில் பிற்பகலில் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐஸ்வர்யா பாட்டியா, முல்லைபெரியாறு மேற்பார்வை குழுவில் மாநிலங்கள் சார்பில், தொழில்நுட்ப உறுப்பினர்கள் நியமிக்கலாம் எனவும் மேற்பார்வை குழுவின் தற்போதைய தலைவரான குல்சன் ராஜ் முழுமையாக செயல்பட இயலாது எனவும் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து வாதத்தை முன்வைத்த கேரளா தரப்பு வழக்கறிஞர் குழுவின் அதிகாரத்தை மாற்றும் போது மேற்பார்வை குழுவையும் மாற்றியமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஏற்கனவே உச்சநீதிமன்றத்தால் மேற்பார்வை குழு அணைக்கப்பட்டு அக்குழு செயல்பட்டு வருகிறது என்றும்,  புதிய குழு அமைத்தால் அவர்கள் இவ்விவகாரம் குறித்து தெரிந்து கொள்ளவே சில மாதங்கள் ஆகும் என்பதால், மேற்பார்வை குழுவை மாற்றியமைக்க முடியாது எனவும் திட்டவட்டமாக  தெரிவித்தனர்.

மேலும், இந்த வழக்கில் நாளைய தினம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என கூறிய நீதிபதிகள் இந்த வழக்கை நாளைக்கு ஒத்திவைப்பதாகவும் தெரிவித்தனர்.