மக்களவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஒத்திவைப்பு.. கடும் கூச்சலில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள்!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மக்களவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஒத்திவைப்பு.. கடும் கூச்சலில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள்!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முதல்கட்டமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11ஆம் தேதி வரையும், இரண்டாம் கட்டமாக மார்ச் 14 முதல் ஏப்ரல் 8ம் தேதி வரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. இதில், கடந்த பிப்ரவரி 1ம் தேதி 2022-23ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் பிப்ரவரி 11ம் தேதியுடன் இக்கூட்டத் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொரின் 2-வது அமர்வு கடந்த 14ம் தேதி தொடங்கியது. இக்கூட்டத்தொடரில், உக்ரைன் விவகாரம், பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை எதிர்க்கட்சிகள் எழுப்பின.

மேலும், குற்றவியல் நடைமுறை மசோதா, டெல்லியில் உள்ள 3 மாநகராட்சிகளை இணைக்கும் மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்களையும்  மத்திய அரசு தாக்கல் செய்து நிறைவேற்றியது.

இந்தநிலையில் 2வது அமர்வு  இன்றுடன் நிறைவடைய உள்ளதாக தகவல் வெளியானது. பரபரப்பான சூழலுக்கு இடையே இன்று மக்களவை தொடங்கியதும்,  விளையாட்டு துறையை மேம்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவை தொடங்கியதும்,  நடப்பு அவை விவரங்களை விளக்கிய சபாநாயகர் ஓம் பிர்லா அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

இதேபோல் மாநிலங்களவை தொடங்கியதும், அன்றைய விவாதத்திற்கான விவரங்களை பட்டியலிட்டு, பூஜ்ஜிய வேளையை அவை தலைவர் வெங்கையா நாயுடு துவங்கினார்.

ஆனால் பெட்ரோல்-டீசல் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்கும்படி எதிர்கட்சிகள் மையப்பகுதியில் சூழ்ந்து கூச்சலிட்டனர். அவை தலைவர் பலமுறை அறிவுறுத்தியும் எதிர்கட்சி எம்.பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், இன்றைய நிகழ்வு தனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிப்பதாக கூறி, அவையை வெங்கையா நாயுடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.