பஞ்சாப்பில் மொபைல், இணைய சேவைகளுக்கு தற்காலிக தடை விதிப்பு.. ஏன்?

பஞ்சாப்பில் பதற்றமான நிலை தொடர்வதை தொடர்ந்து அங்கு தகவல் தொடர்பு சேவைகளுக்கும், இணைய சேவைகளுக்கும் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்பில் மொபைல், இணைய சேவைகளுக்கு தற்காலிக தடை விதிப்பு.. ஏன்?

பஞ்சாபை காலிஸ்தான் என்ற தனிநாடாக அறிவிக்க வேண்டுமென வலியுறுத்தி செயல்பட்டு வரும் Sikh For Justice என்ற அமைப்பானது ஏப்ரல்  29ம் தேதியை, காலிஸ்தான் தனிநாடு தினமாக அறிவித்தது.

இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்மாநிலத்தை சேர்ந்த சிவசேனா கட்சியினர் பாட்டியாலாவில் பேரணி நடத்தினர்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் போட்டி பேரணி நடத்தினர். இரண்டு பேரணிகளும் எதிரெதிரே சந்தித்த போது ஒருவரையொருவர் கற்களை வீசியும் வாள்களை கொண்டும் தாக்கிக் கொண்டனர்.

இரு கோஷ்டியினரிடையே மூண்ட வன்முறையால் அப்பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. இதையடுத்து காவல்துறையினர் தடியடி நடத்தி வன்முறையை கட்டுப்படுத்தினர். இந்த வன்முறையால் பாட்டியாலாவில் 12 மணி நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. வன்முறை சம்பவத்துக்கு பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உரிய அனுமதி பெறாமல் பேரணி நடத்தியதாக சிவசேனா மாநிலத் தலைவர் ஹரிஷ் சிங்க்லாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பராமரிக்க வன்முறை நடத்த பகுதியான பாட்டியாலாவில் போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் இன்று மாலை 6 மணி வரை மொபைல் மற்றும் இணைய சேவைகளுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.