பெங்களூரில் முழு கடையடைப்பு போராட்டம்... தமிழ்நாடு பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்!!

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட எதிர்ப்பு தெரிவித்து கா்நாடகாவில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வந்தாலும், பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டு வருகிறது.

காவிரி மேலாண்மை ஆணையம், காவிரியில் நாள் ஒன்று ஐந்தாயிரம் கனஅடி நீர் வீதம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு கர்நாடக அரசு கடும் ஆட்சேபனை தெரிவித்தது. கன்னட விவசாய அமைப்புகளும் பல்வேறு போராட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தின.

இந்த நிலையில், கர்நாடகா ஜல சம்ரக்சன சமிதி இன்று முழு கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி கர்நாடகாவில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. மருந்தகம், உணவகம் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படுவதால், அலுவலகம் செல்வோர் பாதிக்கப்படவில்லை. 

ஓலா, உபர் ஓட்டுநர் சங்கங்கள் முதலில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது வாபஸ் பெற்றுள்ளன. அசம்பாவிதங்களை தவிர்க்க சில இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக, பெங்களூரு நகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து ஓசூர் வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 400-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி எல்லையிலேயே தமிழக பேருந்துகள், லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் கூடலூர் பகுதிகளில் இருந்து கர்நாடக மாநிலம் மைசூர், மாண்டியா, பெங்களூர், கொள்ளேகால் உள்ளிட்ட பகுதிகளுக்கு  இயக்கப்படும் அரசு பேருந்துகள் முற்றிலும் நிறுத்தபட்டுள்ளன. 

இதேபோல்,  திருப்பத்தூரில் இருந்து பெங்களூரு செல்லும் 17 பேருந்துகள் முதல் நடையில் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்படும் என்று விழுப்புரம் கோட்ட போக்குவரத்துக் கழக மேலாளர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது நடையில் வழக்கம் போல் பெங்களூரு வரை இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிக்க || "எடப்பாடி பழனிச்சாமி நன்றி இல்லாமல் செயல்படுகிறார்" H. ராஜா!!