மின்னல் வேகத்தில் நியமனம் எப்படி? மத்திய அரசுக்கு செக் வைத்த உச்ச நீதிமன்றம்..!

விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே இந்தியத் தேர்தல் ஆணையராக மின்னல் வேகத்தில் அருண்கோயல் நியமிக்கப்பட்டது எப்படி எனக்கூறி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி.
இந்திய தேர்தல் ஆணையர்:
கனகர தொழில்துறை அமைச்சகத்தின் செயலாளராக இருந்த அருண்கோயல் கடந்த 19ம் தேதி விருப்ப ஓய்வு பெற்ற நிலையில், அடுத்த நாளே இந்திய தேர்தல் ஆணையராக அவரை மத்திய அரசு நியமித்தது. தொடர்ந்து தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் முறையில் சீர்திருத்தம் செய்யக் கோரிய மனுக்களை, நீதிபதிகள் கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.
மின்னல் வேகத்தில் நியமனம்:
இன்றைய விசாரணையின்போது, மே 15ம் தேதி முதல் காலியிடம் இருந்தபோதும், அருண்கோயல் ஒரே நாளில் விருப்பஓய்வு பெற்று ஆணையராக நியமிக்கப்பட்டது ஏன் என நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர். இதுதொடர்பான கோப்புகள், 24 மணி நேரம் கூட முழுமையாக பயணிக்காமல் மின்னல் வேகத்தில் அவர் நியமிக்கப்பட்டதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: ”குஜராத்தை போன்று அனைத்து மாநிலங்களும்...” பிரதமர் மோடி!!
நியமனம் தொடர்பாகவே கேள்வி:
தேர்தல் ஆணையருக்கான 4 பெயர்களும் பரிந்துரைக்கப்பட்ட விதமே புரியவில்லை எனக்கூறிய நீதிபதிகள், அதில் இளையவரான அருண்கோயல் எப்படி நியமிக்கப்பட்டார் எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர். அவரின் அனுபவம் மற்றும் கல்வித்தகுதியால் இது தற்செயலாக நடந்தது என மத்திய அரசு பதிலளித்த நிலையில், அருண்கோயலின் நற்சான்றிதழ் குறித்து கேட்கவில்லை எனவும் நியமனம் தொடர்பாகவே இங்கு கேள்வியெழுப்பப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கு தொடர்பாக 5 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.